மதுரை, மே. 5-
திருஞான சம்பந்தரால் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆதீனம் மடம் தோற்றுவிக்கப்பட்டது. சைவ சித்தாந்த கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த ஆதீனம் பாரம்பரிய சிறப்புக் கொண்டது.
மதுரை, விருதுநகர், திருச்சி, திருவாரூர், சிவகங்கை உள்பட பல ஊர்களில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ள மதுரை ஆதீனத்தின் தற்போதைய 292-வது ஆதீனமாக ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம் பந்த தேசிக பரம்மாச்சார்யா உள்ளார். இவர் கடந்த வாரம் மதுரை ஆதீனத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தாவுக்கு முடி சூட்டினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தா நியமனத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. நித்யானந்தாவுக்கு எதிராக சென்னை, மதுரை கோர்ட்டுக்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. நித்யானந்தா ஆபாச சி.டி. புகாரில் சிக்கியவர் என்பதால், அவரை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக தொடர விடக்கூடாது என்பதில் மற்ற ஆதீன தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
மதுரை ஆதீனத்தின் பாரம்பரிய பெருமையை காக்க வேண்டுமானால், அந்த ஆதீனத்தை அரசே ஏற்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மதுரை ஆதீனத்தின் கோடிக்கணக்கான சொத்துக்களை நித்யானந்தா நிர்வகிக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் தொடர்பாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
குறிப்பாக மதுரை ஆதீன சொத்துக்கள் மற்றும் வரவு- செலவுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. இந்த நிலையில் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீனத்தில் மதுரை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீரென வருமான வரி சோதனை நடத்தினார்கள். மண்டல இணைக்கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றபோது மதுரை ஆதீனம் ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரம்மாச்சார்யா மட்டுமே இருந்தார். இளைய ஆதீனம் நித்யானந்தா இல்லை. நித்யானந்தா பெங்களூர் சென்றுவிட்டதால், அவரது சீடர்கள் சிலர் மட்டுமே ஆதீன வளாகத்தில் இருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள், ஆதீனத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.
அதுபோல வெளியில் இருந்து யாரும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. எல்லா கதவுகளையும் மூடிக்கொண்டு சோதனை நடத்தினார்கள். மதுரை ஆதீனம் 2 மாடி கட்டிடம் மற்றும் வளாகத்தை கொண்டது. அந்த வளாகம் முழுவதும் எங்கு வேண்டுமா னாலும் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று பெரிய ஆதீனம் அனுமதி கொடுத்தார். இதையடுத்து ஆதீனம் முழுக்க ஒவ்வொரு அறையாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அதிகாரிகள் 2 குழுவாகப் பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். நித்யானந்தா இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. கையில் தங்க செங்கோல் கொடுக்கப்பட்டது. அதுபோல பெரிய ஆதீனமும் தங்க கிரீடம் மற்றும் கையில் தங்க செங்கோலுடன் காணப்பட்டார். ஸ்ரீஅருணகிரி ஞானசம்பந்தரும், நித்யானந்தாவும் ஏராளமான தங்க ஆபரணங்களும் அணிந்திருந்தனர். அந்த நகைகள் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ததாக தெரிய வந்துள்ளது.
நகைகள் தவிர ஆதீனத்தில் பல கோடி பணம் கையிருப்பு உள்ளது. அந்த பணத்துக்கு முறையாக கணக்கு உள்ளதா? என்றும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இது தவிர ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கு மதுரை ஆதீனம் சார்பில் முறைப்படி வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது? என்று கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
http://www.maalaimalar.com/2012/05/05110128/madurai-adhinam-income-tax-rai.html
No comments:
Post a Comment