பிரபலம் இல்லாதவர்கள் ஒருவர் பிரபலம் அடைய வேண்டும் என்றால், ஒன்று ரசிகர்கள் பலம் வேண்டும், இல்லையென்றால் ஏதாவது ஒரு துறையில் சாதித்திருக்க வேண்டும். ஆனால் சாமியார் நித்யானந்தா புகழ் பரவியது, செக்ஸ் மூலம். இப்படி புகழ் பெற்ற ஒருவர் தற்போது, மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளார். இதற்கு காரணகர்த்தாவாக இருந்துள்ளார் மதுரை ஆதினம்.
பிரபல தமிழ் நடிகையான ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா நெருக்கமாக இருந்த வீடியோ காட்சியை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவரை நித்யானந்தா யார் என்று தெரியாதவர்கள் கூட தொலைக்காட்சியில் இந்த வீடியோவை பார்த்து
தெரிந்து கொண்டனர்.
இப்படி மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சாமியாரை மதுரை ஆதீனம் மகுடம் சூட்டி பார்த்துள்ளார். நித்யானந்தாவுக்கு மகுடம் சுட்டி மதுரை ஆதீனம் பெற்ற தொகையோ ஒரு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆனால், ஆதீனத்தின் ஆன்மீகப் பணிக்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக நித்யானந்தா கூறுகிறார். அதுமட்டுமின்றி இன்னும் 4 கோடி ரூபாய் கொடுக்க உள்ளேன் என்றும் அறிவித்துள்ளார் நித்யானந்தா. அப்படியென்றால் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக மகுடம் சூட்ட 5 கோடி ரூபாய் கொடுக்க உள்ளார்.
மதுரை ஆதீனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மடத்தின் 292வது சன்னிதானமாக ஆதீனம் கடந்த 1980ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது 293வது குரு மகா சன்னிதானமாக நித்யானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.
நித்யானந்தாவுக்கு மகுடம் சூட்டிய மதுரை ஆதீனம், நித்யானந்தாவை ஆஹா… ஓகோ… என்று புகழ்ந்து தள்ளினார். ”ஆற்றல் மிக்கவர், ஆங்கிலத்தில் பேசும் திறமை மிக்கவர், நோய்களை குணப்படுத்தும் திறமை கொண்டவர். அவரை மதுரை ஆதீன வாரிசாக அறிவிப்பது உலக தமிழ்மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்து உள்ளது. ஆதீன மடத்தின் பொறுப்பை அவர் ஏற்பது நாங்கள் செய்த புண்ணியம்” என்றார்.
”மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தது குறித்து சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது அறியாமையை தான் வெளிக்காட்டுகிறது. அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாற்றுகள் பொய்யானவை. ஆதீனத்தின் வாரிசாக ஒருவரை நியமிப்பது அந்த ஆதீன கர்த்தரின் பொறுப்பு. இதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை” என்று மதுரை ஆதீனம் ஆவேசத்துடன் கூறினார்.
மகுடம் சூட்டிக் கொண்ட நித்யானந்தா, ”ஆதீனத்தின் எல்லா புகழையும் நிலை நாட்டுவேன். என் மீது சிலர் பல்வேறு வதந்திகளை பரப்புகிறார்கள். அவர்கள் எல்லாம் பொய்யானவர்கள்” என்றார்.
”யோக்கியன் வாறான் செம்ப எடுத்து ஒளிச்சு வை” என்ற கதைதான் நியாபகத்துக்கு வருகிறது.
கடந்த 8 ஆண்டு காலமாக நித்யானந்தாவுடன் பழகி வந்த மதுரை ஆதீனம், பெங்களூரில் நடந்த ஒரு யாகசாலை பூஜையில் கலந்து கொள்ள சென்ற போது, நித்யானந்தாவை மடத்தின் வாரிசாக அறிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அப்போது, இறைவனிடம் உத்தரவு கேட்டு கூறுகிறேன் என்று சொல்லிய நித்யானந்தா, மறுநாள் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கூறிவிட்டார்.
மதுரை ஆதீனம் தனது இளைய வாரிசாக 293வது குருமகா சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்தார். பதிலுக்கு ஆதீனத்துக்கு தங்கக்கிரீடமும், துளசி மாலையும் அணிவித்து ஆசி பெற்றார் நித்யானந்தா. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனம் தங்கக் கிரீடமும், உத்திராட்சை மாலையும் அணிவித்தார்.
மதுரை ஆதீனத்தின் இந்த செயலை பல்வேறு இந்து அமைப்புகள் கண்டித்துள்ளன. இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளது.
செக்ஸ் வீடியோ மூலம் பிரபலமான சாமியார் நித்யானந்தா, மதுரை ஆதீனத்தை முழுமையாக கைப்பற்றும் நாள் வெகுவிரையில் அரங்கேறும் என்பது உறுதி. நேற்றுதான் மூடிசூடிக் கொண்ட நித்யானந்தா, ஆதீன மடத்தை நிர்வாகிக்க 50 பேரை உடனடியாக அனுப்பி வைத்துவிட்டார்.
http://www.kalapam.ca/2012/05/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE/