எதிர்ப்புக் கோஷ்டியினருக்கு பயந்து சந்துபொந்தெல்லாம் புகுந்து ஓடி... தனது ஆசிரமத்தின் சத்சங்க விழாவை... ஓட்டப்பந்தய விழாவாக மாற்றி... ஆன்மீகக் காமெடியனாக ஆகியிருக்கிறார் சல்லாப சாமியார் நித்யானந்தா.
வழக்கம்போல் இந்த ஆண்டு டிசம்பர் 29 அன்றும் திருவண்ணாமலைக்கு வர நித்யானந்தா முயல்வது குறித்தும்... அவரது வருகைக்கு பலதரப்பிலும் எழுந்துவரும் எதிர்ப்பு குறித்தும்..’"வருகிறார் சல்லாப சாமியார்'’ என்ற தலைப்பில் நக்கீரன் டிசம்பர் 24-27 தேதியிட்ட இதழில் எழுதியிருந்தோம்.
நிபந்தனை ஜாமீனில் இருக்கும் நித்தி... அலப்பரையான வரவேற்புக்கு ஆட்களைத் திரட்டும்படி... திருவண்ணாமலை ஆசிரமத்திற்கு பிடதியில் இருந்தபடியே தகவல் கொடுத்தார். நித்திக்கு எழுந்துவரும் எதிர்ப்பை அறிந்த உளவுத்துறையினர்... லோக்கல் போலீஸை உசுப்ப... லோக்கல் போலீஸோ "சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் வரலாம் என்று எங்களுக்குத் தகவல் வந்திருப்பதால்... ஊர்வலம் செல்லவோ... ரத ஊர்வலம் நடத்தவோ... கிரிவலம் போகவோ நித்தியை அனுமதிக்க முடியாது'’ என கறாராகக் கூறிவிட்டது.
இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் சென்னை வழக்கறிஞர் தனஞ்செயன் டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ‘"நித்யானந்தா நல்லவர். நித்யானந்தாவால்... தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. எனவே அவரும் அவரது தரப்பினரும் சுதந்திரமாக திருவண்ணாமலையில் வழிபாடு செய்ய அனுமதிக்கவேண்டும்'’என்று குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து காவல்துறை ‘கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு நித்யானந்தா அப்படியே கிளம்பிவிட வேண்டும்’ என்று அனுமதி கொடுத்தது.
இதற்கிடையே...’"சல்லாப சாமியாரே வராதே... திருவண்ணாமலையின் புகழைக் கெடுத்தவனே வராதே'’என்றெல்லாம் சி.பி.எம். தோழர்களும் ஜனநாயக வாலிபர் சங்கத் தினரும், மாதர் சங்கத்தினரும், முற்போக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட அமைப்பினரும் ஊர்முழுக்க கண்டனப் போஸ்டர்கள் ஒட்டியதோடு... நித்திக்கு கறுப்புக்கொடி காட்ட ரெடியாயினர்.. நித்திக்குக் கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு கைபிசைந்த அவரது திருவண்ணாமலை ஆசிரமத்தினர்... போராட் டக் குழுவினரைத் திசை திருப்பும் விதமாய்... ‘நித்யானந்தா... 29-ந் தேதி காலை 8 மணிக்குத் தான் கோயிலுக்கு வருகிறார்.
பின்னர் கிரிவலம் போகிறார்’ என தகவல் பரப்பிவிட்டு நித்யானந்தாவை அதிகாலை 4.30-க்கே கோயிலுக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட.... போராட்டக் குழுவினரோ.. நித்தி ஆதரவாளர்களின் இந்த தந்திரத்தை அறிந்து அதிகாலை 3 மணிக்கே முக்கியப் பிரமுகர்கள் செல்லும் அம்மன் கோபுரம் அருகே திரண் டனர். இதை அறிந்த நித்தி... கிடுகிடுவென தன் பரிவாரங்களோடு... ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் ஓடிப்பதுங்கினார். இதனால் கோபமான போராட்டக்குழுவினர்... அந்த அதிகாலை வேளையில் நித்தியை எதிர்த்து பிராந்தியமே அதிரும் வகையில் கோஷங்கள் எழுப்பியதோடு... அவர் வெளியே வருவதற்குக் காத்திருந்தனர்.
அண்ணாமலை சன்னதியிலும் உண்ணா முலையம்மன் சன்னதியிலும் அரக்கப்பரக்க அமர்ந்துவிட்டு... நவக்கிரகங்களுக்கு நெய்விளக் கேற்றியவர்... கோயிலில் இருந்த சிவாச் சாரியார்களுக்கெல்லாம் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கத்தை கத்தையாகக் கொடுத்து குஷிப்படுத்தினார். அங்கிருந்து அருணகிரி மண்டபத்துக்கு அவர் வர... வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்டிருந்த ஆண்-பெண் சீடர் களோடு சிறப்பு பூஜைகள் செய்தார். அங்கிருந்து கிளம்ப எத்தனித்த நித்தியிடம்... ஒரு சீடர் ஓடிவந்து... "எதிர்ப்பாளர்கள், கையில் கருப்புக் கொடியோடு இன்னும் வெளியே காத்துக் கிட்டிருக்காங்க. இப்ப வெளில போனா மண்டகப்படிதான் நமக்குக் கிடைக்கும்'’என்று பதற.. ஒரு கணம் ஆடிப்போன நித்தி... அங்கிருந்த படிக்கட்டில் முகம் இருண்டுப்போய் கொஞ்ச நேரம் அமர்ந்தார். பின்னர் பாதுகாப்புக்கு வந்திருந்த எஸ்.ஐ. ராஜாவிடம் ‘""அவர்களை யெல்லாம் அப்புறப்படுத்தினாத்தான் என்னால் கோயிலை விட்டு வெளியே போகமுடியும்''’ என்றார் பிடிவாதமாக. போலீஸ் தரப்போ ""நீங்க பயப்படாம வெளில வாங்க. நாங்க பாதுகாப்பா அழைச்சிக்கிட்டுப் போறோம்'' என்றனர். இருந்தும் நித்தி "பிரச்சினை, கை கலப்புன்னு ஆனா என்ன பண்றது?'’ என்று வியாக்கியானம் பண்ணினார்.
இதைப்பார்த்த டி.எஸ்.பி.வீரராகவன் ""எங்களுக்கு நிறைய வேலை இருக்கு.. இதுவரை பாதுகாப்பு தந்ததே பெருசு. முதல்ல இங்கிருந்து கிளம்பற வழியைப் பார்க்கச் சொல்லுங்க'' என்று அதிகாரிகள் மூலம் நித்திக்கு சொல்லியனுப்ப... மிரட்சியான நித்தியோ "சரி அம்மன்கோபுரம் வழியா வெளீல போய்டறேன்'’ என்று போக்கு காட்டிவிட்டு... விடுவிடுவென திருமஞ்சன கோபுரவாசல் வழியே ஓட்டமெடுத்து அங்கிருந்த காரில் ஏறிக்கொண்டார். அவரது பிடதி சீடர்கள்... ஜெ’கான்வாய் பாணியில்... நித்தியின் காரைச்சுற்றிலும் தொங்க... கார் வேகமெடுத்து செங்கம் சாலைவழியாக ஆசிரமம் நோக்கி சென்றது. வழியில் சண்முகா பள்ளியருகே ஒரு பகுதி போராட்டக் குழுவினர் கருப்புக்கொடியோடு ‘"சுரணை கெட்டவனே.. உனக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?'’’ என கோஷம் போட... அடிவிழுமோ என பயந்த நித்தியோ... காரை அவசரமாக ஒரு சந்தில் திருப்பச் சொல்லி... அவலூர் சாலை வழியாகப் போக்குக்காட்டி... வேலூர் ரோடு சென்று திரும்பி... காஞ்சி சாலை வழியாக ஆசிரமத்திற்குள் புகுந்துவிட்டார்..
மாலை 5.30-க்கு ஆசிரமத்திற்குள் சத் சங்கத்தைத் தொடங்கி வைத்த நித்தி "என்னைக் குறிவைத்து வெளியானது மார்பிங் வீடியோ. அதை உண்மை என்று சிலர் நம்பிவிட்டார்கள். அந்த சமயம் தமிழகத்தில் இருந்த 120 தியான பீடங்கள் தாக்கப்பட்டன. எங்கள் சந்நியாசிகள் மீது தாக்குதல் நடந்தது. தமிழகத்தில் எனக்கு 12 லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திருப்பித் தாக்கியிருந்தால்... இங்கு சட்டம்-ஒழுங்கு கேள்விக் குறியாகி இருக்கும்'’என சட்டம்- ஒழுங்குக்கு சவால் விட்டவர்...
""நாம் நமது முதல்வரிடம் ஒரு லட்சம் கடிதமாவது ரத்தக் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும். நானே தமிழக முதல்வரை சந்திக்க விரும்புகிறேன். அவருக்கும் நமக்கும் கொள்கை வேறு வேறு என்றாலும் அவர் ஆளும் இடத்தில் இருக்கிறார். அவர் நமக்கு உதவாவிட்டால் கன்னியாகுமரி தொடங்கி ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் பிச்சைப் பாத்திரத்தோடு சென்று... மக்களிடம் ஆதரவைப் பிச்சைக் கேட்பேன். தமிழகத்தில் சினிமாக்கார ஆட்சி, குடிகார ஆட்சி என பல ஆட்சிகளைக் கண்டுவிட்டோம். இனி நாம் தெய்வீக ஆட்சியை உருவாக்க வேண்டும். தமிழகத்திற்குத் தேவை தெய்வீக திராவிட ஆட்சி'' என அரசியல் பேசி... தனது ஆட்சி பீட ஆசையையும் வெளியிட்ட நித்தி...
""சிறையில் என்னை அடைத்ததன் மூலம்... என்னைப் பயமில்லாதவனாக்கி விட்டார்கள். நான் சிறையில் சந்தோசமாகத்தான் இருந்தேன்''’என தான் எதற்கும் துணிந்துவிட்டதையும் பகிரங்கமாகவே பிரகடனப் படுத்தினார்.
அன்று இரவு பக்தர்கள் சிலரைக் கட்டிப்பிடித்து குத்தாட்டமும் போட்ட நித்யானந்தா... அன்று நள்ளிரவில் திரு வண்ணாமலையை விட்டு எஸ்கேப் ஆனார்.
""நடிகை ரஞ்சிதாவுடனான சி.டி.க் களை கிராபிக்ஸ் என்றும் மார்பிங் என்று நித்தி சொன்னாலும் அந்த வீடியோக் காட்சிகளைத் துல்லியமாக ஆராய்ந்த ஹைதராபாத், டெல்லியில் இருக்கும் மத்திய அரசின் தடயவியல் ஆய்வகங்களோ, அவை உண்மையான சி.டி.க்கள்தான் என்றும்... படுக்கையறைக் காட்சிகளில் இருப்பது நித்தியும் நடிகை ரஞ்சிதாவும்தான் என்றும் ரிப்போர்ட் கொடுக்க.. அது பெங்களூர் கோர்ட்டில் சி.ஐ.டி. போலீஸால் தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது'' என்கிறார் நித்யானந்தா மீது புகார் கொடுத்தவரான லெனின் தர்மானந்தா.
சென்னையில் பத்திரிகையாளர் களை சந்தித்து அந்த விவரங்களையும் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில், ""ஸ்பை கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்த ஆண் உருவத்தை (நித்யானந்தா) Exhibit -QMFI என மார்க் செய்தோம். பெண் உருவத்தை (ரஞ்சிதா) Exhibit -QFFI என மார்க் செய்தோம். அதுபோல தனியாக எடுக்கப்பட்ட போட்டோ மற்றும் வீடியோவில் இருந்த ஆண் உருவத்தை Exhibit -SMFI என்றும், பெண் உருவத்தை Exhibit -SFFI என்றும் மார்க் செய்தோம். தடயவியல் ஆய்வு முடிவில் ஊஷ்ட்ண்க்ஷண்ற் Exhibit -QMFI-யிலும் Exhibit -SMFIயில் இருந்த ஆண் உருவங்கள் இரண்டும் (நித்யானந்தா) ஒருவரே என்பது உறுதியானது. அதுபோல ஊஷ்ட்ண்க்ஷண்ற் Exhibit -QFFI-யிலும் Exhibit -SFFI-யிலும் இருந்த பெண் உருவங்கள் இரண்டும் (ரஞ்சிதா) ஒருவரே என்பது உறுதியானது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை விட்டுத் திரும்பும் முன் நித்யானந்தா திருவண்ணாமலை ஆசிரம சீடர்களிடம் "சி.டி.யை வெளியிட்டு நமக்கு ஆட்டம் காட்டிய லெனின் தர்மானந்தா மீது ஒரு புகாரை ஏற்பாடு பண்ணிட்டுத்தான் இங்க வந்தேன். அது இனி என்னென்ன வேலைகளைச் செய்யப் போவுதுன்னு பொறுத்திருந்து பாருங்க' என பூடகமாகச் சொல்லிவிட்டுப் போனார்.
நித்தி அப்படி என்ன லெனின் தர்மானந்தா மீது புகாரை ஏற்பாடு பண்ணியிருக்கிறார் என நாம விசாரித்தபோது... ஒரு பெண்ணைக் கொண்டு லெனின் தர்மானந்தா மீது ஒரு பொய்ப் புகாரை அவர் கொடுக்க வைத்திருப்பது தெரிய வந்தது.
அந்த சி.டி. விவகாரத்தில் சீற்றம் அடங்காமல் இருக்கும் நித்தி, இன்னும் எத்தனை எத்தனை நாடகங் களை நடத்த உத்தேசித்திருக்கிறாரோ?
No comments:
Post a Comment